ஆஸ்திரேலியாவில் 18 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 4 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கார்னர்வோன் நகரில் கடந்த 16 ஆம் தேதி, முகாம் ஒன்றில் காணாமல் போன கிளியோ சுமித் (4) என்ற சிறுமியை தேடி பெரிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மேலும், சிறுமியை பற்றி தகவல் அளிப்போருக்கு 7.5 லட்சம் அமெரிக்க டாலர் ரொக்கப்பரிசு வழங்குவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்த நிலையில், 18 நாட்கள் கழித்து ஒரு வீட்டில் சிறுமி பூட்டி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி, நேற்று காலை பூட்டிய வீட்டை போலீசார் உடைத்தபோது சிறுமி அடைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர், போலீஸ் அதிகாரி தன் கைகளால் சிறுமியை தூக்கி, “உன் பெயர் என்ன? என்று கேட்டதற்கு கிளியோ” என்று கூறினாள்.
இதனை தொடர்ந்து, சிறுமியை மீட்டு குடும்பத்தினருடன் ஒப்படைத்த போது பரவசம் அடைந்த தாய் தனது இன்ஸ்டாகிராமில், “எங்கள் குடும்பம் மீண்டும் முழுமையானது” என பதிவிட்டிருந்தார். தற்போது, சிறுமி கடத்தல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
மெலும், பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் கலந்து கொண்டார். அப்போது, சிறுமி கிளியோ மீட்கப்பட்ட செய்தி அறிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது, “அற்புதம், நிம்மதி அளிக்கும் செய்தி” என கூறினார்.