தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆஸ்திரேலியா பெண் மில்லியன் டாலர் வாக்ஸ் லாட்டரியை வென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் 25 வயதான ஜோன் ஜு என்பவர் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளார். இதனை அடுத்து இவருக்கு மில்லியன் டாலர் வாக்ஸ் லாட்டரியை வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் ஜோன் ஒரே இரவில் பல மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் ஆனார். அதாவது தடுப்பூசி விகிதங்களை அதிகரிப்பதற்காக தன்னார்வலர்கள் மற்றும் சில நிறுவனங்களால் மில்லியன் டாலர் வாக்ஸ் என்ற லாட்டரிச்சீட்டு உருவாக்கப்பட்டது.
இதில் ஏராளமான ஆஸ்திரேலியா மக்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் பிரபல ஊடகத்தின் அறிக்கையின் படி, அக்டோபர் 31 ஆம் தேதி வரை சுமார் 27, 44, 974 பேர் வெற்றி வாய்ப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளிகிழமை ஜோன் ஜுக்கு லாட்டரி அடித்துள்ளது. இது குறித்து அவர் கூறியதில் “நான் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட போது என்னால் நம்ப முடியவில்லை.
இந்த பணத்தில் எனது குடும்பத்திற்காக பரிசுகளை வாங்குவேன். மேலும் மீதமுள்ள பணத்தை முதலீடு செய்வேன். எனது நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர்களுக்கு இனிதான விருந்தை கொடுப்பேன். இறுதியாக கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக எல்லைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் என் பெற்றோரை பார்க்க இயலவில்லை. ஆகவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் அப்பொழுது தான் எல்லைகள் திறக்கப்படும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.