Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvENG : மலான், மொயின் அலி, சாம் கரன் அபாரம்…. “8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி”….. தொடரை கைப்பற்றி இங்கிலாந்து அசத்தல்..!!

2ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி தொடரையும்  கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச முடிவு செய்தார்.. அதன்படி இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லர் 17 மற்றும் அலெக்ஸ் ஹெல்ஸ் 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

இருப்பினும் டேவிட் மலான் சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உட்பட 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் மொயின் அலி 27 பந்துகளில் (4 பவுண்டரி, 2 சிக்ஸர்) 44 ரன்கள் விளாசினார்.. மற்ற முக்கிய வீரர்களான பென்ஸ்ஸ்டோக்ஸ்  7, ஹாரி புரூக் 1, சாம் கரன் 8 என சொற்பரன்களில் ஆட்டம் இழந்த போதும் அலெக்ஸ் மற்றும் மொயின் அலி அதிரடியால் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 178 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களா களம் இறங்கிய டேவிட் வார்னர் 4, ஆரோன் பிஞ்ச் 13 என அடுத்தடுத்து அவுட் ஆகினர். இருப்பினும் மிட்செல் மார்ஸ் 29 பந்துகளில் (3 பவுண்டரி, 2 சிக்ஸர்) 45 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்..

மிடில் வரிசையில் கிளென் மேக்ஸ்வெல் 8,  ஸ்டாய்னிஸ் 22 என ஆட்டமிழந்த போதிலும், டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் (5 பவுண்டரி, 1 சிக்ஸர்) 40 ரன்கள் குவித்த நிலையில், சாம் கரண் வீசிய 18ஆவது ஓவரில் போல்ட் ஆகி ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசியில் 2 ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது.ரீஸ் டோப்லி 19 ஆவது ஓவரில் ஒரு பவுண்டரியும் கொடுக்காமல் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். மேத்யூ வேட் பேட் கம்மின்ஸ் இருவராலும் பவுண்டரி அடிக்க முடியவில்லை..

கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட சாம்கரன் முதல் பந்தில் கம்மின்ஸ் சிக்ஸர் அடித்தாலும், அடுத்தடுத்த பந்துகளில் கட்டுப்படுத்தி 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்  முடிவில் 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் எடுத்தது. மேத்யூ வேட் 10 மற்றும் பேட் கம்மின்ஸ் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இங்கிலாந்து அணியில் சாம் கரண் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2:0 என்ற கணக்கில் தொடரை வென்று முன்னிலையில் இருக்கிறது.

Categories

Tech |