2ஆவது ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி..
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0என்ற கணக்கில் முன்னிலை வகித்து இருக்கின்றது. இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 5, ஆரோன் பின்ச் 0 என அடுத்தடுத்த ஆட்டம் இழந்து வெளியேறினர்..
இருப்பினும் அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் பொறுமையாக ஆடி அதிகபட்சமாக 61 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.. அதனைத்தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் மிட்செல் ஸ்டார்க் 38, மேக்ஸ்வெல் 25, ஜோஸ் ஹேசல்வுட் 23 ரன்களும் அடித்தனர்.. இறுதியில் ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 195 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும், மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்தின் தொடக்க வீரராக மார்ட்டின் கப்தில் டெவோன் கான்வே களம் இறங்கினர்.. தொடக்கத்திலேயே நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே கப்தில் 2 ரன்களில் ஆட்டம் இழந்தார்.. இதையடுத்து கேன் வில்லியம்சன் – கான்வே ஜோடி சேர்ந்தனர்.. இந்த ஜோடியும் நிலைத்து நிற்கவில்லை.. சீன் அபோட் வீசிய 8ஆவது ஓவரில் கான்வே 5 ரன்னில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்..
இதையடுத்து வந்த டாம் லாதம் 0, வில்லியம்சன் 17, டேரில் மிட்செல் 10, மைக்கேல் பிரேஸ்வெல் 12, ஜேம்ஸ் நீசம் 2, மிட்செல் சாண்ட்னர் 16, டீம் சவுதி 2, மேட் ஹென்றி 5, ட்ரெண்ட் போல்ட் 9 என அனைவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, இறுதியில் நியூசிலாந்து அணி 33 ஓவரில் 10 விக்கெட் இழந்து 82 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஆடம் சாம்பா 5 விக்கெட்டுகளும், சீன் அபோட் மற்றும் மிட்செல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியால் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.