தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் தொடரில் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் இறுதியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென்னாபிரிக்க அணி. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. இந்த போட்டி டேவிட் வார்னருக்கு நூறாவது டெஸ்ட் போட்டியாகும்..
இந்நிலையில் முதல் இன்னிங்க்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கி தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகின்றது. இதில் ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களான உஸ்மான் கவாஜா 1 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து வந்த மார்னஸ் லாபுசாக்னே 14 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இருப்பினும் துவக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் கைகோர்த்து பொறுப்பாக ஆடினர்.
இதில் மிகச் சிறப்பாக ஆடிய வார்னர் சதம் விளாசினார். வார்னர் சதம் அடித்ததன் மூலம் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் தனது 25வது சதத்தை (144 பந்து 100 ரன்) அடித்து அசத்தினார். அதே சமயம் 85 ரன்கள் எடுத்து ஸ்மித் ஆட்டமிழந்தார்.இந்த சதத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு தனது டெஸ்டில் அறிமுகமான வார்னர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8,000 ரன்களை கடந்த 8ஆவது ஆஸ்திரேலியா வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளார்.
ஆனால் வார்னர் சதத்தோடு அப்படியே நிறுத்தவில்லை. அதனை தொடர்ந்து அவர் அதே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதமும் விளாசினார். இதன் மூலம் தனது 100ஆவது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து அசத்தியிருக்கிறார். மேலும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டுக்கு பிறகு தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2ஆவது வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். ஜோ ரூட் சென்னையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 100ஆவது டெஸ்டில் 218 ரன்கள் எடுத்திருந்தார்.
சதம் அடித்து விட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்த போது வார்னருக்கு காலில் தசை பிடிப்பு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் 200 (254) ரன்களில் ‘ரிட்டயர் ஹர்ட்’ ஆனார்.. வார்னர் 254 பந்துகளில் (16 பவுண்டரி, 2 சிக்ஸர்) 200 ரன்கள் குவித்தார். அதைத்தொடர்ந்து டிராவிஸ் ஹெட் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடினர். கேமரூன் கிரீன் 6 ரன்னில்ஆடிக்கொண்டிருந்தபோது, அன்ரிச் நார்ட்ஜே பந்துவீச்சில் கைவிரலில் பட்டு அவருக்கு ரத்தம் வந்தது. இதனால் கிரீனும் ‘ரிட்டயர் ஹர்ட்’ ஆனார். இதையடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் அலெக்ஸ் கேரி கைகோர்த்து ஆடினார்.
இறுதியில் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் குவித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் முன்னிலையில் வலுவாக உள்ளது. டிராவிஸ் ஹெட் 48, அலெக்ஸ் கேரி 9 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர். 3ஆம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.
Australia dominate day two in Melbourne
Watch #AUSvSA LIVE on https://t.co/hKQJhPsoED (in select regions) #WTC23 | https://t.co/J0yQTZsCrj pic.twitter.com/mjJSFTBRhT
— ICC (@ICC) December 27, 2022