கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதிய முறையாக போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் ஆலோசனை செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலையை எதிர்நோக்குவதற்காக தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சுகாதாரத் துறை அலுவலர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுவதால் தற்போது கொரோனாவின் பரவலானது குறைந்து வருகிறது.
இதனை அடுத்து இம்மாவட்டத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளில் ஆக்சிசன் வசதியுடன் கூடிய படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு அதிகமாக இருக்கின்றது. ஆனால் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 3-வது அலை பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தொற்றின் பரவலைத் கட்டுப்படுத்துவதற்காக போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் கூறியுள்ளனர்.
அதன்பின் இம்மாவட்டம் முழுவதும் அதிகம் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்துவதோடு பொதுமக்களுக்கு 100% தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் அரசு அறிவித்துள்ள நிலையான கட்டுப்பாட்டு நெறிகளை கடைபிடித்து முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென பொதுமக்களை அதிகாரிகள் வலியுறுத்துகிறார்கள். இதனை தொடர்ந்து கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள், கடைகள், அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதித்து போதிய விழிப்புணர்வை அவர்களிடையே ஏற்படுத்தி வர வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.