Categories
தேசிய செய்திகள்

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்… இரக்கமில்லாமல் வெளியேற்றிய அதிகாரிகள்…!!

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அவர்கள் தங்கியிருந்த முகாமில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிப்பதற்காக அப்னா கேர் என்ற பெயரில் சிறப்பு முகாம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தன்னார்வலர்களை கொண்ட தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தப்படும் இந்த முகாமில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, குழந்தைகளை வேறு முகாமிற்கு மாற்றிவிட்டு முகாமை மூடுமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை நிறைவேற்ற மாவட்ட அதிகாரிகள் நேற்று அந்த முகாமிற்கு வந்துள்ளனர்.

அங்கு தங்கியிருந்த 14 குழந்தைகளையும் வெளியேறும்படி கூறினர். குழந்தைகள் வெளியேற மறுத்ததால் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு குழந்தைகளின் வழக்கறிஞர் பிரியங்கா சுக்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பும் ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞர் பிரியங்கா சுக்லா, முகாம் இயக்குனர் சஞ்சீவ் தக்கார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுக்லா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் முகாமில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் எச்ஐவி நோயாளிகளுக்கான ஒரே பராமரிப்பு முகாம் இது மட்டும் தான் எனக் கூறும் சஞ்சீவ் தாக்கர், முகாமை நடத்துவதற்கு மாதம் ரூ.75 ஆயிரம் வரை செலவு ஆவதாகவும், இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையிடம் மானியம் பெறுவதற்காக முயற்சி செய்த பிறகு தான் பிரச்சினைகள் ஆரம்பம் ஆகி இருப்பதாகவும் அவர் கூறினார். சில அதிகாரிகள் 30 சதவீதம் கமிஷன் கேட்டதாகவும், அதை கொடுக்க மறுத்ததால் முகாமை சோதனை செய்து முறைகேடு நடந்திருப்பதாக கூறி தொண்டு நிறுவன பதிவை ரத்து செய்ய பரிந்துரை செய்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

Categories

Tech |