Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவரை தாக்கி…. கேரளாவிற்கு கடத்தி சென்ற கும்பல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஆட்டோ டிரைவரை தாக்கி கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் புதுக்காலனியில் ஆட்டோ டிரைவரான மெகபூர் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு பெருந்துறைரோட்டில் நின்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் சவாரி கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் திண்டல் செல்ல வேண்டும் என்று கூறியதால் மெகபூர் பாஷா தனது ஆட்டோவில் 3 பேரையும் ஏற்றி திண்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து அந்த 3 பேரும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியை பார்த்து ஆட்டோவை நிறுத்த சொல்லி இருக்கிறார்கள். அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கிய அந்த நபர்கள் திடீரென மெகபூர் பாஷாவை தாக்கி அங்கு ஏற்கனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தூக்கிப்போட்டு அவரை கடத்தி சென்றுள்ளனர்.

இதனையடுத்து அந்த  கார் கேரள மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மாநில எல்லையான வாளையாறு சோதனை சாவடி அருகில் கார் சென்று கொண்டிருந்த போது அனைத்து வாகனங்களையும் நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். இதனையறிந்த மெகபூர் பாஷாவை கடத்த முயன்ற 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். இதனை பார்த்ததும் காவல்துறையினர் விரைந்து சென்று அதில் ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டநாடு பகுதியில் வசிக்கும் முகமது மகன் செரீப் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இவர் பால், தயிர் வியாபாரம் செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஈரோட்டில் இருந்து ஆட்டோ டிரைவர் மெகபூர் பாஷாவை கடத்தி கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்றதை தெரிந்து கொண்ட காவல்துறையினர் இதுகுறித்து சூரம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மெகபூர் பாஷாவையும் காவல்துறையினர் மீட்டனர். இதுகுறித்து அறிந்த சூரம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செரீப்பை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் செரீப் கூறியதாவது, கேரள மாநிலத்தை சேர்ந்த இர்வான்-சோனி தம்பதியினர் ஈரோடு பழையபாளையத்தில்  மசாஜ் மையம் நடத்தி வந்தனர். இவர்களை மெகபூர் பாஷா தனது ஆட்டோவில் சவாரிக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இதனால் இர்வானும் மெகபூர் பாஷாவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இதற்கிடையே இர்வான் செலவுக்காக செரீப்பிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதில் இறவான் ரூ.50 ஆயிரத்தை செரீப்பிடம் திருப்பி கொடுத்து விட்டார். ஆனால் மீதமுள்ள தொகையை இர்வான் செலுத்தாததால் செரீப் அவரை தேடி ஈரோட்டுக்கு வந்துள்ளார்.

ஆனால் ஈரோடு ஓடைமேட்டில் தங்கியிருந்த இர்வான்-சோனி தம்பதி மாயமானதால் அவர்களை வரவழைப்பதற்காக இர்வானுடன் பழகி வந்த ஆட்டோ டிரைவர் மெகபூர் பாஷாவை கடத்தி செல்ல செரீப் திட்டமிட்டுள்ளார். இதற்காக செரீப் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து மெகபூர் பாஷாவுடன் அவரது ஆட்டோவிலேயே சவாரி செய்வது போல் நடித்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று காரில் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செரீப்பிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய மேலும் 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |