பெட்ரோல் ஊற்றும் பொழுது புகைப்பிடித்ததால் உடலில் தீப்பிடித்து ஆட்டோ ஓட்டுனர் பலி
அரியலூர் மாவட்டம் மனக்காடை சேர்ந்தவர் தமிழ்குடிமகன். ஆட்டோ ஓட்டுநரான இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று காலை சவாரிக்காக செல்லும் பொழுது பெட்ரோல் இல்லாமல் ஆட்டோ நடுவழியில் நின்று உள்ளது.
இதனை அடுத்து அங்கே ஓரமாக நிறுத்திவிட்டு அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்று ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார் தமிழ்குடிமகன். புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட தமிழ்குடிமகன் புகை பிடித்துக் கொண்டே பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிகரெட்டில் இருந்து நெருப்பு பாட்டிலில் விழ பதறிப்போன தமிழ்குடிமகன் பெட்ரோலை கீழே ஊற்ற முயற்சித்து அது அவரது மேலே சிதறி தமிழ்குடிமகன் மீது தீ பற்றிக்கொண்டது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர் மேல் பற்றிய தீயை அணைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தார் தமிழ்குடிமகன். இதனையடுத்து கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.