மகராஷ்டிரா மாநிலத்தில் தாமு நகரில் ஆட்டோ டிரைவரான ஷாருக் ஷேக் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 13ம் தேதி சாம்த நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவரை வழிமறித்த ஒரு கும்பல் திருடன் என நினைத்து கை கால்களை கட்டி போட்டு அடித்து நிர்மல் சாவல் பகுதியில் வீசி சென்றுள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயங்களுடன் கிடந்த ஷாருக் என்பவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஷாருக்கின் குடும்பத்தினர் கூடுதல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வெளியே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் ஷாருக் கொலையில் தொடர்புடைய கும்பலை சேர்ந்தவர்களின் படங்களை கொண்ட பேனர்களை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பி உள்ளனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.