ஆட்டோ மீது மினி லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் முத்து கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோவில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வள்ளியூர் சாலையில் ஆட்டோவில் பயணிகளை சவாரிக்காக ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது எதிரே வந்த மினி லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து ஆட்டோ கவிழ்ந்ததால் ஆட்டோ ஓட்டுநரான முத்துகிருஷ்ணன் பலத்த காயம் அடைந்தார்.
ஆனால் ஆட்டோ உள்ளே இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் முத்துகிருஷ்ணனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் முத்துகிருஷ்ணன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மினி லாரி டிரைவரான ராஜாமணி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.