ஆட்டோ மொபைல் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள டால்மியா போர்டு பகுதியில் விவேக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ மொபைல் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாகவே விவேக் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விவேக் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவேக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையில் காவல்துறையினர் விவேக் எழுதிய உருக்கமான கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் எனது அன்பான மகன்களை விட்டு பிரிவது வேதனையாக இருக்கிறது எனவும், எனது மனைவி என்னை அன்போடு வழி நடத்தினார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து என்னை மதித்து வந்த உனக்கு இப்படி ஒரு நிலையை உருவாக்கி விட்டேன் எனவும், தான் எங்கேயும் கடன் வாங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ரம்யாவிற்கு அரசு வேலை வாங்கி கொடுக்க வேண்டும் என விவேக் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.