சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் சங்க பொதுச் செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, கந்தையா, உதயசூரியன், நடராஜன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அதில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆட்டோ டிரைவர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் டீசல் வழங்க வேண்டும் எனவும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது எனவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் சுடலை, ஒருங்கிணைப்பாளர் வரகுணன், மாநில குழு உறுப்பினர் பெருமாள், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் காமராஜ் மற்றும் அரசு போக்குவரத்து கழக செயலாளர் ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.