ஆவடி அருகே உள்ள வீரபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி தான்யா என்பவர் அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பள்ளிக்கூடம் கூட செல்ல கூச்சப்பட்டு, வீட்டிலிருந்து வந்தார். இது குறித்து செய்திகள் வெளியான நிலையில், அடுத்தடுத்து இந்த சிறுமிக்கான உதவிகள் வந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறுமியை நேரடியாக சந்தித்து மருத்துவர் பணியை தொடங்கினார்.
இதற்கிடையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவு பேரில், அவருக்கு இலவச மருத்துவ உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தண்டலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதாக உறுதி செய்யப்பட்ட பின்பு நேற்று மாலை சிறுமி மருத்துவமனைக்கு கிளம்பினார்.
தற்போது அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுமியின் உடல்நிலை, ரத்த பரிசோதனை, ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த முடிவுகள் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக கிடைத்துள்ளது. இதனை தற்போது மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திங்கட்கிழமை முகச்சிதைவு சம்பந்தமான பிரத்தியேக அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன. சிறுமிக்கு அடுத்தடுத்து உதவிகளும் கிடைத்து வருகின்றது. குறிப்பாக திமுக சார்பில் வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் என்பவர் 50, 000 பணம் உதவியை நேரடியாக சந்தித்துக் கொடுத்து, மருத்துவமனையில் எந்த ஒரு உதவியாக இருந்தாலும் தங்களை நாடலாம் என உறுதி அளித்துள்ளனர். சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்ட பலரும் நாங்கள் உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம் என தரப்பினர் தெரிவித்து கொள்கின்றனர்.