ஆவடியில் உள்ள நரிக்குறவர் காலனியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆவடி பேருந்து நிலையத்திற்கு பின்னால் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அந்த காலனியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் தர்ஷினி, பிரியா, திவ்யா ஆகிய மூவரும் சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை விளக்கமாக பேசி இணையதளம் மூலமாக வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த மூன்று மாணவிகளையும் முதல்வர் மு.க ஸ்டாலின் அழைத்து பேசினார். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருவதாக உறுதி அளித்தார்.
ஆவடி நரிக்குறவர் காலனிக்கு அத்தொகுதி எம்எல்ஏ மற்றும் பால்வளத் துறை அமைச்சருமான சா.மு நாசர் நேரில் சென்று அவர்களிடம் குறைகளை கேட்டார். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தருவதாக தெரிவித்தார். பின்னர் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் சாலை, தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நரிக்குறவர் காலனிக்கு ஆவடி மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நிலையில் அமைச்சர் நாசர் சா.மு நாசர் நரிக்குறவர் காலனி நடைபெறும் பணிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வீட்டுக்கு வீடு தனிநபர் கழிப்பிடம் வசதி செய்து தருமாறு பொதுமக்கள் அவரிடம் கேட்டுக் கொண்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகளிடம் அதையும் செய்து கொடுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார். இந்நிகழ்வில் துணை மேயர் எஸ் சூரியகுமார், மாநகராட்சி பொறியாளர் மனோகரன், திமுக மாநகர செயலாளர் ஜி நாராயண பிரசாத், மாநகராட்சி மேயர் ஜி உதயகுமார் உள்ளிட்டோர் இருந்தனர்.