15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணிக்குதித்தான் பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பெயிண்டரான ரஞ்சித்குமார் என்ற மகன் இருக்கின்றார். கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சித்குமார் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரஞ்சித் குமார் சிறுமியை தைலமரம் காட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இந்த தகவலை சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் சிறுமியின் பெற்றோர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதற்கு யார் காரணம் என்று சிறுமியிடம் கேட்டபோது சிறுமி நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினர் ரஞ்சித் குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.