பெண் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பேய்க்குளம் பகுதியில் சுப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகிய இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சுப்பையா உயிரிழந்ததால் அவரின் இழப்பை தாங்க முடியாமல் பேச்சியம்மாள் மனநலம் பாதித்த நிலையில் இருந்துள்ளார். இதனால் பேச்சியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.இந்நிலையில் பேச்சியம்மாள் அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவரின் தோட்டத்தில் இருக்கும் கிணற்றுக்குள் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்தத் தகவலின் படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறந்து மிதந்த பேச்சியம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பேச்சியம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என்று தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.