காதலித்து திருமணம் செய்த பெண் தனது கணவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமாநல்லூர் பகுதியில் தர்மதுரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 23 வயதுடைய பிரவீன் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் மருதப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் மகாலட்சுமி என்ற மகள் இருக்கின்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரவீனும், மகாலட்சுமியும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த மகாலட்சுமியின் பெற்றோர் அவருக்குத் திடீரென திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்நிலையில் மகாலட்சுமி தனது வீட்டை விட்டு சென்று பெற்றோர் சம்மதம் இல்லாமல் பிரவீனை கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து மகாலட்சுமி மற்றும் பிரவீன் ஆகிய இருவரும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மகாலட்சுமி தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மூலம் பிரவீனுக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி தனது கணவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.