தென்காசியில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவர் இறந்தவுடன் மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள குலசேகரன் கோட்டை கிராமத்தில் 74 வயதான சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 72 வயதான ஜிஜிபாய் என்ற மனைவி இருந்துள்ளார். சண்முகவேல் மற்றும் ஜிஜி பாய் ஆகிய இருவரும் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு பாலமுருகன், சிவகுமார், சந்திரசேகர் ஆகிய 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் சண்முகவேலின் மகன்கள் பாலமுருகன் தற்போது தலைமை ஆசிரியராகவும், சிவக்குமார் விவசாயமும், சந்திரசேகர் சுய தொழில்களை செய்து வருகின்றார்கள். இந்நிலையில் சண்முகவேல் உடல் நலக்குறைவால் சில நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் சண்முகவேல் மனைவியான ஜிஜி பாய் மிகுந்த மன வருத்தத்தோடு இருந்துள்ளார்.
இதனையடுத்து சண்முகவேல் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் அளித்த சிகிக்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அவர் இறந்த செய்தியை ஜீஜி பாயிடம் தெரிவித்தால் அவருக்கும் உடல்நிலை பாதிக்கப்படும் என்று அவர்களுடைய மகன்கள் அவரிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் ஜிஜி பாய் தனது வீட்டிற்கு தன் கணவரை காண்பதற்காக ஆட்கள் வருவதை கண்டு தனது மகன்களிடம் அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ஆனால் தனது கணவர் இறந்துவிட்டார் என்பதை புரிந்துகொண்ட ஜீஜி பாய் அவர் என்னை விட்டுப் போய் விட்டாரா என்று சொல்லியபடியே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவத்தை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, இருவரின் உடல்களை ஒரே குழியில் அடக்கம் செய்து உள்ளனர். மேலும் கணவன் மனைவி இணை பிரியாத தம்பதிகளாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.