ஆடு திருடிய வாலிபரை இறைச்சி கடை உரிமையாளர் துரத்தி சென்று கையும் களவுமாக பிடித்தார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் அழகாபுரியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நம்பியூர்-புளியம்பட்டி சாலையில் இறைச்சிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ஆடுகளை வெட்டுவதற்காக சக்திவேல் அதை வாங்கி தன்னுடைய கடையின் பின் பகுதியில் கட்டி வைத்திருந்தார். இதனையடுத்து ஆட்டை கடைக்கு கொண்டுவர சக்திவேல் சென்றார். அப்போது அதில் ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை என்று தெரிகிறது. இதனால் தன்னுடைய நண்பர் குணசேகர் என்பவரின் உதவியுடன் சக்திவேல் ஆடுகளை பல இடங்களில் தேடிப் பார்த்தார். அப்போது நம்பியூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து ஒரு வாலிபர் ஆட்டை கொண்டு சென்றார்.
அவரை பார்த்து சந்தேகமடைந்த சக்திவேல் அருகில் சென்று பார்த்தபோது அது தன்னுடைய ஆடு என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களை பார்த்ததும் வேகமாக தப்பிச் செல்ல முயன்ற அந்த வாலிபரை சக்திவேல் துரத்தி பிடித்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் வாலிபர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் வாலிபர் சக்திவேலின் ஆட்டை திருடியதாக காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்தனர்.