பொதுமக்களின் அவசர பயன்பாட்டிற்கு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக, பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளன. அந்த தடுப்பூசிகளில் பல இறுதி கட்டத்தில் இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றின் பிறப்பிடமாக உள்ள சீனாவில், பல்வேறு நிறுவனங்கள் பொருளை தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன. அதில் கடந்த மாதம் 22ஆம் தேதி கொரோனா அவசர பயன்பாட்டுக்கான தடுப்பூசி பரிசோதனையை சீனா தொடங்கியுள்ளது.
உள்ளூர் நிறுவனங்கள் மூலம் தயார் செய்த இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட சிலருக்கு லேசான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் காய்ச்சல் போன்ற குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் அவசர பயன்பாடுகளுக்கு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொல்வதற்கு சீனா அனுமதி அளித்திருக்கிறது. மிகக் குறைவான கால கட்டத்தில் கொரோனாவிற்கு ஆளாகும் அபாயத்தில் இருக்கும் மக்களுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவின் தடுப்பூசி மேலாண்மை சட்டத்தின்படி, கடுமையான பொது சுகாதார அவசரநிலை ஏற்படுகின்ற நேரத்தில், மருத்துவம் மற்றும் தொற்று நோய் தடுப்பு பணியாளர்கள் மற்றும் எல்லை அதிகாரிகள் உள்ளிட்ட பிரிவினரை பாதுகாப்பதற்கு மருத்துவ பரிசோதனைகளில் இருக்கின்ற தடுப்பூசிகளை பயன்படுத்த இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.