உலகப் புகழ்பெற்ற அவதார் படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு ஜேம்ஸ் கேமரூன் இரண்டாம் பாகமான அவதார் The way of water என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் டிசம்பர் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவதார் 2 படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
அவதார் முதல் பாகத்தில் மனிதர்கள் செய்யும் அதிகார அத்துமீறல்களை ஜேம்ஸ் கேமரூன் பட்டியலிட்டு ஏலியன்களுக்கான தேவ தூதனான ஜேக் சல்லி எப்படி உருவானார் என்பதை காண்பித்து இருப்பார். அதன் பிறகு ஜேக் சல்லிக்கும், காலனல் மைல்ஸுக்கும் இடையே இறுதி யுத்தத்தில் எதிர்பார்த்த முடிவு கிடைத்துவிட பாண்டோரா உலகை விட்டு மனிதர்கள் வெளியேறி மீண்டும் பூமிக்கு சென்று விடுவார்கள்.
இதுதான் அவதார் முதல் பாகத்தின் கதை. இந்நிலையில் ஜேக் சல்லியின் குடும்பத்தினருக்கும் அவரை சார்ந்த பாண்டோரா மக்களுக்கும் மீண்டும் பிரச்சினைகள் வர அந்த பிரச்சினைகளில் இருந்து தன் குடும்பத்தையும், தன்னையும் எப்படி ஜேக் சல்லி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் இரண்டாம் பாகத்தின் ஒரு வரி கதை. அவதார் 2-ம் பாகத்தில் ஜேக் சல்லி குடும்பம், குழந்தை என சந்தோஷமாக இருக்க மனிதர்களின் தொல்லை மீண்டும் தலைதூக்கி புதிய அணிகளை அனுப்பி பாண்டோரா உலகை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள்.
அதோடு காலனல் மைல்ஸும் வேறொரு புதிய தோற்றத்தில் மீண்டும் பாண்டோரா உலகுக்கு வர இனியும் காடுகளில் வாழ்ந்தால் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற முடியாது என்று முடிவு செய்து ஜேக் காடுகளை விட்டு வெளியேற முடிவு செய்கிறார். அதன் பிறகு ஜேக் தன்னுடைய குடும்பத்துடன் ரீஃப் மக்கள் வாழும் Metkqyina பகுதிக்கு சென்று விடுகிறார். அங்கு சென்ற பிறகு புது இடம், புது குடும்பம், புது பிரச்சினை என்ற கோணத்தில் கதை செல்கிறது.
இந்த படத்தின் விஷுவல் ட்ரீட் வேற லெவலில் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதோடு கடலில் இருக்கும் வித்தியாசமான உயிரினங்கள், காடுகளில் இருக்கும் வித்தியாசமான செடிகள் என கற்பனைக் காட்சிகளை மிக பிரம்மாண்டமாக திரையில் காண்பித்து இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். இந்தப் படத்தில் டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் இரு உலகங்களுக்கு இடையே நடக்கும் சண்டை, பாண்டோரா உலகை கைப்பற்ற நினைக்கும் மனிதர்கள், ஈகோ பிரச்சனை, குடும்ப செண்டிமெண்ட், படத்தின் கதாபாத்திரங்கள் என படம் பார்க்கும் வரை நம்மை திரையில் வேறொரு உலகுக்கே ஜேம்ஸ் கேமரூன் அழைத்துச் செல்கிறார். மொத்தத்தில் அவதார் 2 படம் பிரம்மாண்டங்களும், ஆச்சரியங்களும், குடும்ப செண்டிமெண்டும் நிறைந்த சிறந்த படம் என்று தான் சொல்ல வேண்டும்.