கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் , ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.இந்த நிலையில் தமிழகத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது.
கடந்த 3 நாட்களுக்கு முன்புகூட தமிழக தலைமைச் செயலாளர் ஒரு சுற்றறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி இருந்தார். அதில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட வேண்டாம். போதுமான தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். இது தொடர்பாக நாளை தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றார்.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்க வேண்டும். 60 ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் 59 மாதிரிகளில் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. ஓமனில் இருந்து வந்தவரை சென்னை விமான நிலையத்தில் சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை. தேனியில் புதிதாக ரத்த பரிசோதனை மையம் அமைக்கப்படும் பணி நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.