நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தது 70 விழுக்காட்டினர் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவுஸ்திரேலியா நாட்டிலும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. இதனால் அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். அதில் நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தது 70 சதவீதம் பேர் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வரை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
இந்த ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிட்னி மற்றும் மெல்பர்ன் நகர மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து போராட்டம் செய்தவர்களில் பலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அஸ்திரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 22 ஆம் தேதி புதிதாக ஒரே நாளில் 830 பேருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விக்டோரியா மாகாணத்திலும் 65 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.