சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிவிஆர் திரையரங்கில் 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா இன்று தொடங்கியுள்ளது. இந்த விழாவை தமிழக அரசுடன் இணைந்து இண்டோ சினி அப்ரிஷேஷன் அமைப்பு நடத்துகிறது. இந்த விழாவை தமிழக செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த சில வருடங்களாக கொரோனா பரவலின் காரணமாக திரைப்படத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை படிப்படியாக சரியாகி விட்டதால், எல்லா விழாக்களும் நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக தமிழக அரசு வருடம் தோறும் ரூபாய் 75 லட்சம் நிதி வழங்குகிறது.
அதேபோன்று இம்முறையும் 75 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 2017-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய அனைத்து விருதுகளும் வழங்கப்படும் என்று கூறினார். இந்த விழாவின் இறுதியில் எண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பின் செயலாளரும், விழா ஒருங்கிணைப்பாளருமான தங்கராஜ் பேசினார். அப்போது தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருக்கும் பாரதிராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் இந்த திரைப்பட விழாவில் 50 நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படும் நிலையில், சிறந்த தமிழ் படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு 9 விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.