அயர்லாந்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கியுள்ளது. அவற்றுள் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் பொது இடங்களில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் 200 பேர் வரை பங்கேற்கலாம் என்று வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்து, தற்போது 15 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டுமென புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் விவசாயத் துறை மந்திரி டாரா காலரி, தலைநகர் டப்ளினில் இருக்கின்ற நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இரவு விருந்தில் பங்கேற்றார். அந்த இரவு விருந்தில் அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் உட்பட 80க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். அரசு விதித்துள்ள சுகாதார கட்டுப்பாடுகளை மீறி மந்திரி விருந்தில் பங்கேற்றதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக பிரதமர் மைக்கேல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ” நாடு முழுவதிலும் இருக்கின்ற மக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இணங்க தங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் தங்கள் தொழிலில் மிகவும் கடினமான தியாகங்களை செய்திருக்கின்றனர். இப்படி ஒரு சூழலில் மந்திரி அந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் தவறான செயல்” என்று அவர் கூறியுள்ளார்.