அஜர்பைஜான் மற்றும் அர்மீனியாவின் எல்லையில் இருக்கும் நாகோர்னோ – காராபாக் என்ற மலைப்பிரதேசத்திற்காக 2 நாடுகளுக்கிடையே பல காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.
அஜர்பைஜான் மற்றும் அர்மீனியாவில், கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இந்த பிரச்சனை பெரும் போராக மாறியது. இரண்டு நாடுகளை சேர்ந்த ராணுவத்தினர் 6 வாரங்களாக தொடர்ந்து சண்டையிட்டனர். இதில் 6,000-த்திற்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது சர்வதேச அளவில் மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கியது.
எனவே ரஷ்யா மேற்கொண்ட பேச்சுவார்த்தை பலனளித்தது. நவம்பர் மாதத்தில் இரு நாடுகளும் மோதலை நிறுத்துவதாக அறிவித்தது. இந்நிலையில் நேற்று அஜர்பைஜான் அர்மீனியா எல்லை பகுதியில் இரு நாடுகளின் ராணுவத்தினருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் அர்மீனியாவின் ராணுவத்தை சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள். மேலும் இரண்டு வீரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று அஜர்பைஜானில் இரண்டு வீரர்கள் பலத்த காயமடைந்ததாக கூறப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ரஷ்யா இரண்டு தரப்பினருக்கும் இடையேயான மோதலை நிறுத்துவதற்கு வலியுறுத்தியுள்ளது. எனவே ரஷ்யாவின் கோரிக்கைக்கு ஏற்ப அஜர்பைஜான் ராணுவம், அர்மீனியாவுடனான மோதலை நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறது.