கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா குமாரி கொரோனா குமார் என பெயர் சூட்டியுள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது
நாட்டை அச்சப்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனியார் தொண்டு நிறுவனங்களும் அதற்கு உதவி புரியும் விதமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த குறும்படம் மற்றும் பாடல் போன்றவற்றை தயார் செய்து வருகின்றனர். அவ்வகையில் ஆந்திராவில் சற்று வித்தியாசமான முறையில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியுள்ளனர்.
ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் இருக்கும் வெம்பள்ளி மண்டலத்தில் எஸ்.எப்.பாஷா மருத்துவமனை உள்ளது. இங்கு ஏப்ரல் 4 ஆம் தேதி மற்றும் 5 ஆம் தேதியில் ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவம் பார்த்த மருத்துவர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெண் குழந்தைக்கு கொரோனா குமாரி என்றும் ஆண் குழந்தைக்கு கொரோனா குமார் எனவும் பெயர் சூட்டினார். பெற்றோர்களும் மருத்துவரின் ஆலோசனையை ஏற்று கொரோனா பெயருக்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதேபோன்று உத்திர பிரதேசத்திலும் கடந்தவாரம் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு லாக்டவுன் எனவும் பெண் குழந்தைக்கு கொரோனா எனவும் பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.