இந்தியாவில் எஸ்எம்ஏ என்னும் நோய் பாதித்த குழந்தைக்கு சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் 16 கோடி ரூபாய் கொண்ட மருந்தை வழங்கி உதவியிருக்கிறது.
பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் இருக்கும் ரெகுபல்லி கிராமத்தை சேர்ந்த ராயபுடி பிரவீன் மற்றும் ஸ்டெல்லா தம்பதியினுடைய பெண் குழந்தைக்கு எஸ்எம்ஏ நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் இயங்கும் நோவார்டிஸ் என்னும் மருந்து நிறுவனம் உலகிலேயே விலை அதிகமான ஊசி வடிவிலான Zolgensma மரபணு சிகிச்சையை அளித்திருக்கிறது.
இந்த அரிய வகை மரபணு நோய் உலகில் 10 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தையை பாதிக்கும். இந்த நோய் பாதித்த குழந்தைகளின் நரம்புகளும் தசைகளும் பாதிப்படையும். குழந்தைக்கு சுவாசிப்பது, பால் குடிப்பது, தலையை அசைப்பது, தரையில் அமர்வது போன்ற சாதாரண செயல்களைக்கூட மிகவும் சிரமத்துடன் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த நோய் தாக்கம் வேகமாக அதிகரித்து, குழந்தையை இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே இறக்கச் செய்துவிடும். தற்போது இந்த குழந்தை மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்கிறது. சுவிட்சர்லாந்தின் நோவார்டிஸ், மருந்து தயாரிப்பு நிறுவனம் உயிரைக் கொல்லும் கடுமையான வியாதிகள் இருக்கும் நோயாளிகளுக்கு அவர்கள் நாட்டில் கிடைக்காத மருந்து தயாரிப்புகளை கொடுத்து உதவுகிறது.