மலையடிவாரத்தில் பச்சிளம் குழந்தையின் சடலமானது சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் தமிழ்நாடு ஹோட்டல் பழைய கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தை சுற்றிலும் மரம், செடி, கொடிகள் அடர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் அந்த இடத்தில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்து விட்டனர்.
அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்தக் குழந்தையின் உடலை மீட்டனர். ஆனால் விலங்குகள் கடித்துக் குதறியதால் அந்த குழந்தையின் உடலானது சிதைந்திருந்தது. இதனால் அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பது தெரியவில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையை அந்த இடத்தில் வீசியவர்கள் யார் என்ற விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.