கனடா நாட்டில் வித்தியாசமாக பிரசவம் பார்க்கப்பட்ட குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் வசிக்கும் மனிஷ் மற்றும் ஸ்வாதி பட்டேல் என்ற தம்பதிக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் குழந்தை பிறந்த இரண்டு நாட்களில் பரிதாபமாக பலியானது. அதற்கு காரணம் Brampton Civic என்னும் மருத்துவமனையின் வித்தியாசமான முயற்சி தான்.
அதாவது, அந்த தம்பதியிடம் அனுமதி பெறாமலேயே vaccum முறையில் பிரசவம் பார்க்கப்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் குழந்தையின் தலையில் இருந்து அதிகமான ரத்தம் வெளியேறி கொண்டே இருந்துள்ளது. ஆனால் மருத்துவர்கள் குழந்தை வெளியேறும் வரும் இரத்தம் என்று கருதி அப்படியே விட்டுள்ளார்கள்.
அதன் பிறகு குழந்தைக்கு பிரச்சனை இருப்பது தெரியவந்தவுடன் மற்றொரு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வரும் வரை குழந்தையை சரியாக கவனிக்காமல் விட்டுள்ளனர். அந்த மருத்துவர்கள் வந்து பார்த்தபோது குழந்தைக்கு இரத்தம் இல்லை என்று ரத்தம் ஏற்றியுள்ளார்கள்.
அப்போது குழந்தையின் தலையில் இருந்து சொட்டு சொட்டாக ரத்தம் வெளியேற தொடங்கி, அதன் பின்பு அதிகமான ரத்தம் வெளியேறி இருக்கிறது. எனவே, குழந்தையின் தலைப்பகுதியில் அதிக காயம் இருப்பதை மருத்துவர்கள் அறிந்தனர். அதற்குள் குழந்தைக்கு அதிகமான ரத்தம் வெளியேறி ஒவ்வொரு உள்ளுறுப்பாக செயலிழந்தது.
மேலும் மூளையும் பாதிப்படைந்து குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. எனினும், உரிய மருத்துவமனை குழந்தைக்கு என்ன பிரச்சனை என்பதை பெற்றோர்களிடம் தெரிவிக்கவில்லை. vaccum முறையில் பிரசவம் பார்ப்பதற்கு அவர்களிடம் அனுமதி வாங்கவும் இல்லை. இது மட்டுமல்லாமல், அவர்கள் செய்த தவறுக்கு தற்போது வரை மன்னிப்பு கோரவில்லை. தற்போது, அந்த தம்பதி மருத்துவமனை மீது புகார் தெரிவித்திருக்கிறார்கள்.