விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை தந்தையே தென்பெண்ணையாறு ஆற்றில் புதைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை அடுத்த சுந்தரேசபுரம் ஏரியாவை சேர்ந்தவர் வரதராஜன். இவருக்கும் சௌந்தர்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்து 15 மாதங்கள் ஆன நிலையில், இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி அடைந்த வரதராஜன் குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின் அவரது உறவினர்கள் சௌந்தர்யாவை மருத்துவமனையில் இருந்து அழைத்து வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
குழந்தை பிறந்த மூன்றாவது நாளே அதை தூக்கிக் கொண்டு தென்பெண்ணை ஆற்றுக்கு சென்று புதைக்க முயற்சித்துள்ளார். பின் அக்கம் பக்கத்தினர் பார்த்து குழந்தையை வைத்து வீட்டில் ஒப்படைத்தனர். இதனால் அச்சமடைந்த சௌந்தர்யா குழந்தையை பாதுகாக்க தனது தாய் வீட்டிற்கு சென்று குழந்தையை வளர்த்து வந்துள்ளார். பின் வரதராஜன் நாம் ஒன்றாக சேர்ந்து வாழலாம் குழந்தையை ஒன்றும் செய்யமாட்டேன் என்று நாடகமாடி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் குழந்தை பிறந்து 15 நாட்கள் ஆன அன்றே குழந்தையை சௌந்தர்யா வீட்டில் இல்லாதபோது தூக்கிக்கொண்டு தென்பெண்ணை ஆற்றுக்கு சென்று புதைத்துள்ளார்.
பின் சௌந்தர்யா வீட்டில் குழந்தையைத் எங்கு தேடியும் காணாததால் வரதராஜன் மீது சந்தேகம் அடைந்து தென்பெண்ணை ஆற்றுக்கு உறவினர்களுடன் சென்று தேடி பார்த்துள்ளார். அங்கு ஆங்காங்கே குழி தோண்டப்பட்டு கிடந்தது. இதையடுத்து அங்கே தோண்டிய பொழுது குழந்தை துணி சுற்றி புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் இதுகுறித்து காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வரதராஜனை பிடித்து விசாரித்ததில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.