பெண்ணொருவர் ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டு மறுகையில் ஜன்னலைப் பிடித்துக் கொண்டு உயர்ந்த கட்டிடத்தின் மேல் நின்ற காணொளி வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனில் வெப்சிட் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் இருந்து திடீரென பெண்ணொருவர் ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியேறியுள்ளார். ஜன்னலுக்கு வெளியில் நிற்பதற்கு கூட இடமில்லாத சூழலில் அவர் ஒரு கையில் குழந்தையுடனும் மறு கையால் ஜன்னலைப் பிடித்துக் கொண்டும் உயரத்தில் நிற்பதைக் கண்ட மக்கள் பதறிப் போயினர். வெளியான காணொளியின் பின்னணியில் ஒரு பெண் “குழந்தை பத்திரம், நீங்கள் என்ன செய்கிறீர்கள்” என்றும் கதறுவதை கேட்கமுடிகிறது.
கீழே நின்ற நான்கு பேர் ஒரு வேளை அந்தப் பெண் குழந்தையை கீழே போட்டுவிட்டால் பிடிப்பதற்கு தயாராக கைகளை நீட்டியபடி நின்றிருந்தனர். ஆனால் ஜன்னலில் இருந்து வெளியேறிய பெண் சிறிது நேரம் அங்கேயே நின்று விட்டு பின்னர் வீட்டிற்குள் வந்த வழியாகவே போய்விட்டார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து மேற்கொண்ட விசாரணையில் குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது.