கர்நாடக மாநிலம் தட்சிணா கன்னடா மாவட்டத்தில் மங்களூர் நகர் நாகூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோவில் இருந்த ஏதோ ஒரு பொருள் வெடித்ததில் ஆட்டோ பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஒரு பயணிக்கு பலத்த காயம் ஏற்படவே அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீப்பிடித்து எரித்த ஆட்டோவில் இருந்து ஒரு குக்கரை கைப்பற்றியுள்ளனர்.
ஒருவேளை குக்கர் வெடித்ததால் ஆட்டோவில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் தடவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஆட்டோவை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்டோவில் என்ன பொருள் வெடித்தது என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும், போலி தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கோவையில் கார் வெடி விபத்து ஏற்பட்டதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்த விவகாரம் இன்னும் அடங்காத நிலையில், தற்போது கர்நாடகாவில் மர்ம பொருள் வெடித்ததில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.