மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஒருபோதும் நிறைவேற்றாது என்று பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நேற்று காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பா.சிதம்பரம் பேசுகையில், ” காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள் அதிக அளவில் சேர வேண்டும். மக்கள் தற்போது நடக்கும் பாஜக ஆட்சியில் நிம்மதியாக இல்லை. மத்திய அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களையே நிறைவேற்றுகிறது. ஆனால் அத்திட்டங்களை மக்கள் ஏற்க மறுக்கின்றனர்.
பாஜகவினர், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் என்று விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசு ஒருபோதும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக இல்லை. பாஜக இந்தி பேசும் மாநிலத்தில் மட்டும் தான் வளர்கிறது. மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வளர்ச்சி இல்லை. திராவிடமும், தேசியமும் சேர்ந்து தமிழ் வளர்த்த தமிழகத்தில் எக்காலத்திலும் பாஜக துளிர்க்க முடியாது. பாஜக விஷச்செடிக்கு சமமானது. பாஜக தமிழகத்தில் கால்பதித்தாள் தமிழக மக்கள் நிம்மதியாக இருக்கவே முடியாது.
அதிமுக-பாஜக கூட்டணி ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது. அது கட்டாய திருமணம் போல இருக்கும். நான் தொடர்ந்து மத்திய அரசு செய்யும் தவறுகளை விமர்சித்து கொண்டே இருப்பேன். 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்திற்கும் “நான் வருவேன்” என்று கூறினார்.