வேலை கிடைக்காததால் விரக்தியில் பேக்கரி மாஸ்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே இருக்கும் 100 அடி சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு நபர் இந்த மேம்பாலத்தின் மீது ஏறி திடீரென நான் சாகப் போகிறேன் என்று கூறியவாறு கீழே குதித்து விட்டார். இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த நபர் மேம்பாலத்தின் மீது ஏறி வாகனங்கள் அனைத்தும் சென்ற பிறகு கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட காட்சிகள் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட நபர் பேக்கரி மாஸ்டரான செந்தில் என்பதும், வேலை கிடைக்காத விரக்தியில் அவர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.