அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சினையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலைமையில் இருக்கும் நிலையில் தீர்ப்பை பொறுத்துதான் அதிமுக கட்சியின் தலைமை அதிகாரம் யாருக்கு செல்லும் என்பது தெரிய வரும். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன் தற்போது இபிஎஸ் அணியில் இணைந்துள்ளார்.
அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தன்னுடைய செல்வாக்கை நிரூபிப்பதற்காக தன்னுடைய ஆதரவாளரான எஸ்.பி சண்முகநாதனுக்கு மாவட்ட அளவிலான பதவியை கொடுப்பதற்கு முடிவு செய்தார். இதனால் தூத்துக்குடி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு வடக்கு மாவட்ட செயலாளராக கடம்பூர் ராஜூவும், தெற்கு மாவட்ட செயலாளராக எஸ்.பி சண்முகநாதன் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு செல்ல பாண்டியனுக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இருப்பினும் மாவட்ட செயலாளர் அதிகாரமிக்கவர் என்பதால் தன்னுடைய சொந்த மாவட்டத்தில் தன்னுடைய செல்வாக்கை நியமிப்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என செல்லபாண்டியன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் செல்லபாண்டியனிடம் கடம்பூர் ராஜு சுமுகமான முறையில் பேச்சு வார்த்தை நடத்தி அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியதால் இபிஎஸ் பக்கம் தற்போது இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.