Categories
கிரிக்கெட் விளையாட்டு

பால் டெம்பரிங் விவகாரம்…. எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை…. ஆஸ்திரேலிய பவுலர்கள் மறுப்பு….!!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதற்கும், எங்களுக்கும் எந்த சம்மதமும் இல்லை என்று ஆஸ்திரேலிய பவுலர்கள் கூறியுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் பான்கிராப்ட் , உப்புத்தாள் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதால்  9 மாத தடையும் , இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற, இந்த விவகாரத்தில் தற்போது  பான்கிராப்ட் புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளார். அவர்  சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறும்போது, இந்த பந்து விவகாரத்தில், அணியின் பவுலர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும், அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை, என்று கூறியிருந்தார்.

இவருடைய  பேச்சால் தற்போது மீண்டும் அந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. எனவே அந்த டெஸ்ட் போட்டியில் பங்குபெற்ற பவுலர்கள் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், நாதன் லயன் ஆகியோர் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “நாங்கள் ஆஸ்திரேலிய அணிக்காக நேர்மையுடன் விளையாடுகிறோம் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  ஆனால் கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியிலிருந்து, எங்களுடைய நேர்மையான ஆட்டத்தை  கடந்த சில நாட்களாகவே பத்திரிக்கையாளர்களும், முன்னாள் வீரர்களும்   சில தவறான கருத்துக்களை தெரிவிப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் பலமுறை பதில் அளித்து விட்டோம். இதனால் முக்கிய விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறோம் .

போட்டி நடைபெற்றபோது ,மைதானத்தில் உள்ள பெரிய திரையில்  ஒளிபரப்பப்பட்ட காட்சியில்  தான் பான்கிராப்ட் , உப்புத்தாளை  பயன்படுத்தி பந்தை சேதப்படுத்திய விஷயம் எங்களுக்கு தெரியும். அதற்கு முன்னதாக எங்களுக்கு இது பற்றி தெரியாது. இந்த விவகாரத்தில் எங்களை குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று  அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதுபற்றி ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு பான்கிராப்டை தொடர்புகொண்டு விசாரித்துள்ளனர். ஆனால் பான்கிராப்ட் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் சொல்லும் அளவிற்கு என்னிடம் குறிப்பிடத்தக்க புதிய தகவல்கள் எதுவும் இல்லை, என்று கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |