நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பண்டாரம்பட்டி கிராமத்தில் தங்களின் வீட்டு வாசலில் BAN ஸ்டெர்லைட் என கோலமிட்டு கருப்புக் கொடி காட்டிய எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கு சம்மதம் தெரிவித்ததற்கு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.