தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத் தின் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டக் தொழிலாளர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
ரிலீசுக்கு தயாராக இருக்கும் இப்படத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபு என்பவர் கர்ணன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “பண்டாரத்தி புராணம்” என்ற பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் விதத்தில் உள்ளது.
ஆகையால் இப்பாடல் வெளியான யூடியூப் சேனல் மற்றும் கர்ணன் படத்திலிருந்து இதனை நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி ஆகியோர் இப்பாடலை வெளியிட்ட யூடியூப் சேனல், திரைப்பட தணிக்கைத் துறையின் மண்டல அலுவலர், இப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.மேலும் இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 16ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.