அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரியிருந்தது. இதற்கு தமிழக அரசு, காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதியை பெற்றது. சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகள் விதித்து ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியிருந்தது..
இந்நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு தமிழகம் முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடைபெறும் அதே நாளில் பிற அமைப்புகளும் பேரணி என அனுமதி கோரி உள்ளன. எனவே அந்த நாளில் எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்க இயலாது.
மாநிலம் முழுவதும் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்று தமிழக அரசு தெரிவித்து தடை விதித்துள்ளது.. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.