வார இறுதி மூன்று நாட்களுக்கு வழிபாட்டு தலங்கள் தடை தொடரும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை, கட்டுப்பாடுகள், தளர்வுகள், கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க முதல்வர் தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது. தலைமை செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட கருத்துக்களின்படி தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக கொரோனா நோய் பரவக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, நோய் பரவலை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அத்தியாவசிய அவசியத்தை கருத்தில் கொண்டும், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 31ஆம் தேதி 10- 2021ஆம் நாள் காலை 6 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.
சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை நடைமுறையில் இருக்கும். நோய் தொற்று பரவாமல் இருக்க பெருமளவில் மக்கள் ஒன்றுகூட கூடிய நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாடுகளும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.
வழிபட்டு தளங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு தொடர்ந்து அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ள அரசு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதே போல நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறும், கூட்டம் கூடி இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், உரிய கட்டுப்பாடுகளால் மட்டுமே கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க இயலும் என்பதை உணர்ந்து, அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டுப்பாடு விதி முறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.