ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றுள்ளது .
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 36 ரன்களும் , மொகமது நயீம் 30 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 132 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது.
ஆனால் வங்கதேச அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இதனால் 11 ரன்களில் 3 முன்னணி வீரர்களை இழந்தது. இறுதியாக 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 45 ரன்கள் எடுத்தார். வங்காளதேச அணி தரப்பில் நசும் அகமது 4 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான், ஷோரிபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர் . இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்காளதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.