சக வீரர்களுடன் கை குலுக்கிய குற்றத்திற்காக முன்னாள் செல்சி அணியின் கால்பந்து வீரர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, நடப்பு ஆண்டு சீசன் கால்பந்து போட்டியை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி சீசன் போட்டிகளை மைதானங்களில் பார்வையாளர்கள் இன்றி நடத்த திட்டமிட்ட கால்பந்து சம்மேளனம் பயிற்சியாளர்களிடம் தகுந்த சமூக இடைவெளியுடன் மைதானங்களில் பயிற்சி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
மேலும் பயிற்சியாளர்கள் சக வீரர்களுடன் கை குலுக்குதல், பயிற்சி அளித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என்பது முக்கிய விதி முறையாக அறிவித்து இருந்தது. ஆனால் செல்சி அணியின் முன்னாள் ஸ்டரைக்கரும், தற்போதைய ஹெர்த்தா பெர்லின் அணியின் வீரருமான சாலமன் காலோ என்பவர் டிரஸ்ஸிங் ரூமில் சக வீரர்களுடன் கைகுலுக்கி ஜாலியாக இருந்ததை வீடியோவாக பதிவு செய்து,
முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட ஜெர்மனி கால்பந்து சம்மேளனம் அவருக்கு கண்டனம் தெரிவிக்க ஹெர்தா பெர்லின் அணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மீது தகுந்த விசாரணை என்பது நடைபெற்று வரும் சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் மற்றொரு வீடியோவை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.