ஃபானி புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். ‘பானி’ புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பில் வெளியிட்டது. மேலும் இது ஒடிசாவின் கோபால்பூர்-சந்த்பாலி இடையே வருகின்ற மே 3ம் தேதி கரையை கடக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது பானி புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளது. சென்னைக்கு வடகிழக்கே 420 கிமீ தூரத்தில் ஃபானி புயல் மையம் கொண்டுள்ளது. ஒடிசாவிலுள்ள பூரி பகுதியில் நாளை மறுநாள் ஃபானி புயல் கரையை கடக்கும். ஃபானி புயல் காரணமாக வங்க கடலில் அதிவேகமாக பலத்த காற்று வீசக்கூடும். மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் மே 3-ந் தேதி வரை செல்ல வேண்டாம். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.