ஆரணியில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஒய்வு பெற்ற வங்கி ஊழியரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, அதே பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் அந்த சிறுமி விட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில், நேற்று சிறுமியின் பெற்றோர் ஆரணி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்று விட்டனர். அப்போது, சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அதேபோல ஆரணி டவுன் பிரகாஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் 70 வயதான மூர்த்தி. ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் இருக்கின்றனர்.
மூர்த்திக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கிறது.. தினமும் குடித்துவிட்டு வீட்டில் குடும்பத்தினரிடம் தகராறு செய்வாராம். இதனால், அவரது குடும்பத்தினர் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் அவரை தங்க வைப்பார்கள்.
இந்த நிலையில் மூர்த்தி நேற்று வழக்கம்போல் குடித்துவிட்டு மது போதையில் வந்ததால் அந்த அறையில் அவர் இருந்துள்ளார். அந்த சமயம் அவ்வழியாக வந்த சிறுமியை மூர்த்தி ஆசை வார்த்தைக் கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதில் சிறுமியின் உடலில் சில காயங்கள் ஏற்பட்டதால் வலியால் துடித்து வீட்டில் அழுது கொண்டிருந்தார்..
அப்போது சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். வீட்டில் சிறுமி அழுதுகொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போன பெற்றோர் என்ன நடந்தது என்று விசாரித்ததில் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து உடனே பெற்றோர் சிறுமியை ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.. அங்கு சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி கொடூரன் மூர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். வங்கி ஊழியர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.