கோவையில் 4 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்புஏற்பட அவர்கள் வசித்த பகுதி முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பகுதியை அடுத்த வேலாண்டிபுரத்தில் 10 வயது சிறுமி உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதற்கு அருகில் இருக்கக்கூடிய வெங்கடாபுரம் பகுதியில் 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 4 பேரும் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தொடர்ந்து அப்பகுதியில் வேறு யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்று சோதனை மேற்கொள்ளப்பட்டு வர,
கோயம்புத்தூர் மாநகராட்சி இந்த இரண்டு பகுதிகளையும் சீல் வைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்தப் பகுதியில் பேரிகார்டு வைத்து அடைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வெளியே செல்லவோ அல்லது வெளி நபர்கள் அப்பகுதிகளுக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட இந்த பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்,
பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய மற்றும் நேரடி தொடர்பு உடையவர்கள் 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.