இந்திய அரசு தடை செய்த ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அங்கீகரிக்கப்படாத ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பதற்கும், உற்பத்தி செய்வதற்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இவை மற்ற மீன்களை வேட்டையாடி உண்ணும் காற்று சுவாசப் மீன்கள் ஆகும். மேலும் எட்டு ஆண்டுகள் வளரும் தன்மை கொண்ட இந்த மீன்கள் நீர்நிலைகளில் வந்துவிட்டால் இதனை அழிக்க முடியாது.
ஏனெனில் இவை குறைந்தளவு நீரில் அதிகளவு இனப்பெருக்கம் செய்யும் திறனை கொண்டவை. மேலும் இம்மீன்களால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் அபாயம் உருவாகி விடும். இதனையடுத்து மீன் வளர்ப்புக் குளங்களில் அல்லது குட்டைகளிலும் வளர்க்கப்படும் இம்மீன்கள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் வெளியில் சென்று ஆறுகள் மற்றும் ஏரிகளில் கலந்து மற்ற மீன்களை உணவாக்கிக் கொள்ளும்.
எனவே அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை மீன் விவசாயிகள் கண்டிப்பாக வளர்க்க கூடாது என ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் எச்சரித்துள்ளார். ஒருவேளை ஏற்கனவே இவ்வகை மீன்களை பண்ணைகளில் வைத்து வளர்த்தால் அதனை உடனடியாக அழித்துவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இந்த தடையை மீறி ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்பவர் தொடர்பான தகவல்களை 04567230355 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து பொதுமக்கள் புகாரை தெரிவிக்கலாம் என கலெக்டர் கூறியுள்ளார்.