சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்று தலைநகரின் மேம்பாலத்தில் ஒரு பேனர் கட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கின் அரசாங்கத்திற்கு எதிராக எப்போதாவது அரிதாகத் தான் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் சீன அரசாங்கத்திற்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்களுடன் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்நகரில் மக்கள் நடமாடும் நெருக்கடி நிறைந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு மேம்பாலத்தில் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்றும் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையிலும் வாசகங்கள் எழுதப்பட்ட பேனர் தொங்கவிடப்பட்டிருக்கிறது.
மேலும் அந்த இடத்தில் நெருப்பு வைக்கப்பட்டிருந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். இதை செய்தது யார்? என்று தெரியவில்லை. எனினும், காவல்துறையினர் அந்த பேனரை உடனே அங்கிருந்து அகற்றி விட்டனர். அதனை யார் வைத்தது? என்பது தெரியாததால் காவல்துறையினர் அங்கு சோதனை பணியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் இந்த பேனர் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் பதிவிடப்பட்டிருந்ததை அரசு நீக்கியுள்ளது.