ஆசியக்கோப்பை 3ஆவது லீக் போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி..
கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்நிலையில் நேற்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3ஆவது லீக் போட்டியில் மோதியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து வங்கதேச அணி 127 ரன்கள் எடுத்தது.. அதிகபட்சமாக மொசாடெக் ஹொசைன் 48* (31) ரன்கள் எடுத்தார். மேலும் மஹ்முதுல்லாஹ் 25 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான், ரஷீத் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர்.இருவரும் ஸ்லோவாகவே ஆரம்பித்த நிலையில், ஷகீப் அல் ஹசன் வீசிய 5ஆவது ஓவரில் குர்பாஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஹஜ்ரத்துல்லாஹ்வுடன் இப்ராஹிம் சத்ரான் ஜோடி சேர்ந்தார்.. இருவரும் தட்டி தட்டி பொறுமையாக ஆடி வந்தனர்.. இந்த நிலையில் 23 ரன்கள் எடுத்த ஹஜ்ரத்துல்லாஹ்வும் 9.2ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார்.. அப்போது அணியின் ஸ்கோர் 45/2 என்று இருந்தது.
இதையடுத்து வந்த கேப்டன் முகம்மது நபி 8 ரன்கள் எடுத்த நிலையில், முகமது சைபுதீன் வீசிய 13 வது ஓவரின் கடைசி பந்தில் வெளியேறினார்.. 13 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 62 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட் இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அதன்பின் நஜிபுல்லா சத்ரனும், இப்ராஹிம் சத்ரானும் கைகோர்த்து ஆடினர். ஓவருக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. அப்போது எந்தவித பதட்டமும் இல்லாமல் அசால்ட்டாக சிக்ஸர்களை பறக்க விட ஆரம்பித்தார் நஜிபுல்லா.. போட்டி கடைசி வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மொசாடெக் ஹொசைன் வீசிய 19ஆவது ஓவரில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் நஜிபுல்லா.
இதனால் 18.3 ஓவரில் 131 ரன்கள் எடுத்து வென்றது ஆப்கான்.. கண்ணிமைக்கும் நேரத்தில் ஆதிரடியாக ஆடிய நஜிபுல்லா 1 பவுண்டரி, 6 சிக்சருடன் 17 பந்துகளில் 43* ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் இப்ராஹிம் சத்ரான் 42* (41) ரன்கள் எடுத்திருந்தார். வங்கதேச அணி தரப்பில் ஷகீப் அல் ஹசன், மொசாடெக் ஹொசைன், முகமது சைபுதீன் ஆகியோர் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் சூப்பர்-4க்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது.